www.islamkalvi.com
மனிதர்களின் இயல்புகளும் குணங்களும் மாறுபட்டவையாக இருப்பதாலும், புரிந்து கொள்ளும் ஆற்றல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வினாலும், அறிவில் காணப்படும் தராதரத்தினாலும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதே வேளை குர்ஆன்-சுன்னாவுக்கு முக்கியத்துவமளிக்காமை, தனி நபர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தல், மனோ இச்சை, ஊர் வழமை, தன்மானப் பிரச்சினை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதாலும் கருத்து வேறுபாடுகள் உறுவாகின்றன.
கருத்து வேறுபாட்டைத் தவிர்த்தல் வேண்டும்:-
முடிந்தவரை கருத்து வேறுபாட்டைத் தவிர்க்க முனைய வேண்டும். சிலர் இல்லாத கருத்து வேறுபாடுகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தம்மை முன்னிலைப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கின்றனர். சில அழைப்பாளர்களிடம் காணப்படும் இந்த “முதன்மை ஊக்கம்” என்ற உளவியல் பலவீனம் அல்லது பிரபலம் தேடும் உளவியல் குறைபாடு களத்தில் குழப்பமான சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்றது.
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரைமீதிருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக் குத் தெளிவாக்கு கிறான்”. (3:103)
“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.” (8:46)
“நீங்கள் அவன் பக்கமே திரும்பிவிடுங்கள். அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். தொழுகையையும் நிலை நிறுத்துங்கள். இன்னும், இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்.” (30:31-32) என்ற வசனங்கள் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பதன் அவசியத்தை உணர்த்துகின்றனர்.
நீங்கள் முரண்படாதீர்கள். உங்கள் உள்ளங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுவிடும். (புகாரி)
என்ற நபிமொழி முரண்பாடுகள் உள்ளங்களுக் கிடையில் பிணைப்பை அறுத்துவிடும் என்பதை உணர்த்துகின்றது.
இருவர் ஒரு ஆயத்துக் குறித்து தர்க்கித்துக் கொண்டிருக்கும் சப்தத்தைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், தனது முகத்தில் கோபம் தெளிவாகத் தெரியும் நிலையில் அவர்களிடம் வந்து, “தமது வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டது தான் உங்களுக்கு முன்பிருந்த சமூகங்களை அழித்தது” எனக் கூறி இப்போக்கைக் கண்டித்தார்கள். (முஸ்லிம்)
எனவே கருத்து முரண்பாட்டில் அதிக அக்கறை காட்டாது, ஒரு வசனம் குறித்தோ ஹதீஸ் குறித்தோ சர்ச்சை எழும் போது முடிந்தவரை வாதப் பிரதிவாதங்களைத் தவிர்த்து ஒதுங்கிக்கொள்வது நல்லதாகும்.
கருத்து வேறுபாடுகளால் பிளவாகவோ, பிரிவாகவோ ஆக்காதிருத்தல்:-
அகீதாவுடன் தொடர்புபடாத, பிக்ஹ் மஸ்அலாக்கள் தொடர்பான அல்லது இஜ்திஹாதுக்குரிய அம்சங்களை பிளவுக்கோ, பிரிவுக்கோ உரிய காரணமாக ஆக்காதிருக்க வேண்டும். ஏனெனில், பிளவு ஏற்பட்டு விட்டால், சீர்திருத்தத்தை விட சீர்கேடுகளே நடைபெறும் சாத்தியம் அதிகமாகும். இது குறித்து அறிஞர் ஷாதிபீ(ரஹ்) அவர்கள் தமது “அல் முவாபிகாத்” என்ற நூலில் குறிப்பிடும் போது,
“கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அந்த கருத்து வேறுபாடுகளால் குரோதமோ, பகைமையையோ, பிரிவினையோ ஏற்படவில்லையென்றால் அதன் மூலம் அது இஸ்லாமிய அடிப்படையில் உருவான கருத்து வேறுபாடு என்று அறிந்துகொள்ளலாம். எனவே, கோபத்தையும், குரோதத்தையும், பிரிவினையையும் உருவாக்கும் கருத்துவேறுபாடுகளுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும் அறிந்துகொள்ளலாம்.
“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தபோது – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்”. (3:103)
என்ற வசனம் மூலம் இதை உணரலாம். கருத்து வேறுபாடு பிரிவினையை உண்டுபண்ணினால் அது அவர்களது மனோ இச்சையைப் பின்பற்றுவதால் ஏற்படுவதேயாகும். இது வழிகெட்ட பிரிவின் அடையாளமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(அல் முவாபிகாத் 4/186)
எனவே, சாதாரண கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி கோபத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்திக்கொள்ளவோ, பிரிவினையை உருவாக்கி விடவோ கூடாது!
கருத்து வேறுபாடுகளின் தராதரத்தைப் புரிந்து கொள்ளுதல் :-
கருத்து வேறுபாடு என்ற பதம் பொதுவானது! ஆனால், இது எது தொடர்பாக எழுகின்றது என்பதைப் பொறுத்து அதன் பாரதூரம் ஏறி இறங்கலாம். தீமையை அந்தத் தீமையின் அளவுக்கே எதிர்க்க வேண்டும். எனவே, கருத்து வேறுபாட்டின் தராதரத்தைப் புரிந்து கொள்ளல் அவசியமாகும்.
1) அகீதா தொடர்பான கருத்து வேறுபாடுகள்:-
இஸ்லாமிய அடிப்படை அம்சங்களில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைச் சாதாரணமாகக் கொள்ள முடியாது! உதாரணமாக, அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்; ஈமான் கூடும் – குறையும், பெரும் பாவங்கள் குப்ரை ஏற்படுத்தாது, கழா கத்ரை நம்புதல் வேண்டும். முஸ்லிம் உலகில் தோன்றிய பல்வேறுபட்ட வழிகெட்ட அமைப்புக்கள் இதற்கு மாற்றமான அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளன. ஆனால், இது கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற விடயங்களில் மாற்று அபிப்பிராயம் கொள்ள முடியாது!
2) பிக்ஹ் மஸ்அலாக்கள் தொடர்பான கருத்து வேறுபாடு:-
உதாரணமாக, பெண்ணைத் தொட்டால் வுழு முறியுமா? முறியாதா? ஒட்டக இறைச்சி உண்டால் வுழு முறியுமா? என்பன போன்ற மஸ்அலாக்கள். இதில் ஒருவர் மாற்றமான அபிப்பிராயத்தில் இருந்தால் கூட அகீதா விடயத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர் போன்று எதிர்க்க முடியாது! இதில் மாற்றுக் கருத்துடையவர்களிடம் சுன்னாவின் கருத்தை முன்வைக்க வேண்டும். அவர்களும் சுன்னாவின் தெளிவான கருத்து கிடைத்து விட்டால் தமது கருத்தை விட்டு விட்டு சுன்னாவின் கருத்தை எடுத்து நடக்கவேண்டும். இது போன்ற அம்சங்களில் தான் மத்ஹபுடைய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் எழுந்தன. அவர்கள் இத்தகைய கருத்து வேறுபாடுகளைப் பிளவாகவோ, பிரிவாகவோ, பகைமைக்கான காரணியாகவோ ஆக்கியதில்லை.
3) இஜ்திஹாதுக்குரிய ஆதாரங்கள்:-
குர்ஆன்-சுன்னாவில் நேரடியாக ஆதாரம் கிட்டாமல், ஆழமாக ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டிய விடயங்கள் தான் இத்திஹாதுடைய விடயங்களாகும். இதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு எழும். ஒரு அறிஞர் சரியான முறையில் முயற்சித்து பிழையான தீர்வை முன்வைத்தால் கூட அவரது ஆய்வுக்குக் கூலி உண்டு என இஸ்லாம் கூறுகின்றது. இரண்டில் ஒன்று தான் சரி என்று தீர்க்கமான முடிவு செய்ய முடியாத இஜ்திஹாதுக்குரிய விடயங்களில் குர்ஆன்-சுன்னாவை வைத்து அவரவர் புரிந்து கொண்டதின் அடிப்படையில் ஆய்வு செய்யும் அதே வேளை, அடுத்த தரப்பாரைக் குறை கூறாதிருக்க வேண்டும்.
தடுக்கப்பட்டவை கருத்து வேறுபாட்டுக்குரியவை அல்ல:
கப்ரு கட்டுதல், அதற்கு விளக்கேற்றுதல் போன்ற அம்சங்களை இஸ்லாம் தடுத்துள்ளது. நேரடியாக ஹதீஸ் தடுத்துள்ள இது போன்ற விடயங்களில் கூட சமூகத்துக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது! அதற்காக இது போன்ற அம்சங்களைக் கருத்து வேறுபாட்டுக்குரியவை என்று கூற முடியாது! இவை தடுக்கப்பட்டவை.
இவ்வாறே எவ்வித ஆதாரமுமற்ற வணக்க வழிபாடுகள் “பித்அத்”துக்களாகும். அவற்றை இஸ்லாம் தடுத்துள்ளது. கூட்டு துஆ, கத்தம், கந்தூரி, மவ்லிது போன்ற அனைத்து “பித்அத்”துக்கள் விடயத்திலும் சமூகத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. அதற்காக இவற்றை கருத்து வேறுபாட்டுக்குரிய விடயங்கள் என்று சாதாரணமாகக் கூறி விடமுடியாது. இவை எவ்வித மார்க்கச் சான்றுகளும் இல்லாமல் சமூகம் உருவாக்கிக் கொண்ட சடங்குகள்! தடுக்கப்பட்ட “பித்அத்”துக்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மாற்றுக் கருத்துடையவர்களையும் மதித்து நடத்த வேண்டும்:
நாம் புரிந்து கொண்டதற்கு மாற்றமான கருத்தை முன்வைப்பவர்கள் பல ரகத்தினர்களாக இருப்பார்கள். சிலர் மாற்றுக் கருத்துக்களைக் களைவதை விட மாற்றுக் கருத்துடையவர்களின் கண்ணியத்தையும் சமூக அந்தஸ்தையும் குறைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இது சாதாரண கருத்து வேறுபாட்டை குரோதமாக மாற்றி விடுகின்றது.
ஒருவர் மாற்றுக் கருத்துடையவரென்றால், சமூக அச்சத்தின் காரணமாக, அறிவீனமாக, நுனிப்புல் மேய்ந்ததால் அரபு அறிவு இன்மையால் இப்படிக் கூறியுள்ளார் என்று குத்தல் வார்த்தைகளால் எழுதும் போதும், பேசும் போதும் விரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
அனுபவம் வாய்ந்த “தாயி”கள் கூட இந்தப் பாணியினைப் பின்பற்றுவது தான் வியப்பாக உள்ளது. இதனால் கருத்து மாற்றத்தை ஒரு போதும் ஏற்படுத்த முடியாது! இது மன முறிவையே உண்டுபண்ணும். எனவே, மாற்றுக் கருத்துடையவர்களைத் தரக் குறைவாக நோக்குவதையோ, விமர்சிப்பதையோ தவிர்க்கவேண்டும். அதே வேளை சத்தியத்தைச் சொல்வதிலும் உறுதியாக இருக்கவேண்டும்! கருத்தை கண்ணியமாக மறுக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையவர்களை மட்டரகமாக விமர்சிக்கலாகாது!
நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தல்:
மாற்றுக் கருத்தை மறுக்கும் போது நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தி மறுக்க முனைய வேண்டும்.
(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான். (17:53)
எமது பேச்சு நடை நற்பையும் பிணைப்பையும் உண்டுபண்ணுவதாக இருக்க வேண்டுமே தவிர குரோதத்தையும், பிரிவையும் உண்டுபண்ணுவதாக அமைந்து விடக் கூடாது.
சத்தியமே இலக்கு:-
சத்தியத்தை தெளிவுபடுத்துவதே எமது இலக்காக இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையவர்களை மட்டம் தட்டுவதையோ, தன்னைப் பிரபல்யப்படுத்துவதையோ நோக்கமாகக் கொள்ளக்கூடாது.
அடுத்து உண்மையைக் கண்டறியும் உணர்வுடன் உரையாட வேண்டும். அடுத்தவர் கூறும் அனைத்தையும் எதிர்ப்பது என்ற நிலை கூடாது. சில போது உண்மை எமது எதிர்த்தரப்பினர் பக்கம் கூட இருக்கலாம். இது குறித்து இமாம் ஷாபியீ(ரஹ்) அவர்கள் கூறும் போது,
“நான் யாருடன் வாதிட்டாலும் சில போது சத்தியம் அவர் பக்கம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இன்றி வாதிட்டதே கிடையாது” என்று குறிப்பிடுகின்றார்கள்.
கடுமை காட்டத் தேவையற்ற விடயத்தில் கடுமை காட்டி விடக் கூடாது!
அகீதா கருத்து வேறுபாடுகள் போன்று இஜ்திஹாதுடைய விடயங்களைக் கைக்கொள்ள முடியாது! சிலர் சாதாரண கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி ஒருவருக்குப் பின்னால் மற்றவர் தொழுவதைத் தவிர்த்து விடுகின்றனர். கூட்டங்களில் பங்குகொள்வதைத் தவிர்க்கின்றனர். மார்க்கக் கருத்து வேறுபாடாக இல்லாது கால நேர சூழலை அவதானித்து மசூராவின் அடிப்படையில் செய்ய வேண்டிய முடிவுகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் கூட ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வதற்கான காரணியாக எடுத்துக் கொள்கின்றனர்.
உதாரணமாக, தஃவாவைப் பகிரங்கமாகச் செய்வதா? இரகசியமாகச் செய்வதா? என்பதை நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்தார்கள். தஃவா செய்ய வேண்டும் என்பது இறைக் கட்டளை அதை எப்படிச் செய்வது என்பதை ஆலோசனை மூலம் முடிவு செய்தார்கள். இதில் ஏற்படும் கருத்து வேறுபாடு மார்க்கக் கருத்து வேறுபாடு அல்ல. உதாரணமாக, ஒரு ஊரில் நாம் தனியாக ஜும்ஆ செய்வதா? இல்லையா? என்பது கால நேர சூழல், எமது பலம்-பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு மசூராவின் அடிப்படையில் செய்ய வேண்டிய முடிவாகும். இதில் இரு கருத்து வந்தால், ஏற்கனவே இருந்த முடிவில் இருக்க வேண்டும். சில போது இதில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை அகீதாவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு போல் கருதி ஒருவரை மற்றவர் விமர்சிப்பதையும், பகைத்துக் கொள்வதையும், பிரிந்து விடுவதையும் பார்க்கின்றோம். இது கருத்து வேறுபாட்டைக் கையாள்வதில் ஏற்பட்ட பிழையான அனுகுமுறையின் விளைவுகளாகும்.
எனவே, இது விடயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டு, குழப்பமான சூழ்நிலைகளைத் தவிர்க்க முனைவோமாக!
(முற்றும்)